தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துருவ் ஜூரெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 132 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவற, இந்திய ஏ அணி 255 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டியான் வான் வூரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்படி லெசெகோ செனோக்வானே, சுபைர் ஹம்சா, டெம்பா பவுமா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மனும் 26 ரன்களுடன் நடையைக் கட்டினார்.