PAK vs AUS, 3rd ODI: பாபர் ஆசாம் சதம்; ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்தது.
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லாகூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருமே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்கள். அதன்பின்னர் மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நன்றாக ஆடிய பென் மெக்டெர்மோட் 36 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின்னர் பொறுப்புடன் ஆடிய அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 34 ரன்னிலும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் நேதன் எல்லிஸ் ஆகிய இருவரும் தலா 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, 166 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி.
கடைசி விக்கெட்டுக்கு சீன் அபாட்டுடன் ஜோடி சேர்ந்த ஆடம் ஸாம்பா, ஒருமுனையில் விக்கெட்டை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள மறுமுனையில் சீன் அபாட் அடித்து ஆடி 40 பந்தில் 49 ரன்களை விளாசினார். ஆனால் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு கடைசி விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, 41.5 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.
இதையடுத்து 211 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இமாம் உல் ஹக்கும் கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கிய அவர்கள் இருவரும் அதன்பின்னர் விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் போட்டியை முடித்தனர்.
பாபர் அசாம் அபாரமாக ஆடி சதமடித்தார். பாபர் அசாம் 105 ரன்களும், இமாம் உல் ஹக் 89 ரன்களும் அடிக்க, 38ஆவது ஓவரிலேயே 211 ரன்கள் என்ற இலக்கை எட்டி பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.
Win Big, Make Your Cricket Tales Now