
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் அதிகபடியான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக முதல் செஷன் முழுவதும் டாஸ் போடப்படாமல் ஒத்திவைக்கபட்டிருந்தது. அதன்பின் உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்றைய தினமே அறிவிக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இரு அணிகளும் தங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை முன்னிலைப்படுத்தி பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளனர். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன் களமிறங்கிய பாஅகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே ஷொரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணியானது 16 ரன்களுக்குளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனையடுத்து இணைந்த சைம் அயூப் மற்றும் சௌத் ஷகீல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.