PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முயற்சியில் வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முத இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது லிட்டன் தாஸின் சதத்தின் மூலமும், மெஹிதி ஹசனின் அரைசதத்தின் மூலமாகவும் 262 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 138 ரன்களையும், மெஹிதி ஹசன் 78 ரன்களையும் சேர்த்தனர்.
Trending
பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குர்ரம் ஷஷாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக், குர்ராம் ஷஸாத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை சைம் அயுப் 6 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர்.
இதில் இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியது. இதில் சைம் அயூப் 20 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 28 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் ஷகீலும் 2 ரன்களுடனும் நடையைக் கட்டினார். அதன்பின் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின்ன் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 43 ரன்களிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆகா சல்மான் 47 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழதனர். இதனால் பாகிஸ்தான் அணியானது 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், நஹித் ரானா 4 விக்கெட்டுகளையும் அகைப்பற்றினர். இதனால் வங்கதேச அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை அதிரடியாக தொடங்கியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜாகிர் ஹசன் 31 ரன்களையும், சாத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now