
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிமுதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஃபர்ஹான் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சைம் அயுப் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஃபர்ஹானுடன் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஹாரிஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்த கையோடு ஃபர்ஹானும் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹசன் நவாஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் சல்மான் ஆகா 19, ஷதாப் கான் 7 மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஒரு ரன்னில் என விக்கெட்டுகளை இழந்தனர்.