
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சைம் அயூப் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனைத்தொடர்ந்து அப்துல்லா ஷஃபிக்குடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களின் 5ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 102 ரன்களில் அப்துல்ல ஷஃபிக் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷான் மசூத்தும் 151 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாபர் அசாமும் 30 ரன்களுடன் நடைடைக் கட்ட, பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது.