PAK vs ENG, 3rd Test: 304 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்; தொடக்கத்தில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. மறுபக்கம் மூத்த வீரர் அசார் அலியை வெற்றியுடன் வழியனுப்பவும், ஆறுதல் வெற்றியை பெறவும் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
Trending
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஃபிக் - மசூத் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால், இங்கிலாந்து அணி ஜாக் லீச்சை முன்னதாக பந்துவீச கொண்டு வந்தது. அதற்கு பலனாக ஷாஃபிக் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மசூத் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அசார் அலி - பாபர் அசாம் இணை சேர்ந்தது.
நிதானமாக விளையாடிய அசார் அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாபர் அசாம் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய வீரர்களில் ஷகீல் 23, ரிஸ்வான் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமும் 78 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 219 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனால் களத்தில் இருந்த சல்மான் டெய்லண்டர்களுடன் இணைந்து பாகிஸ்தான் ஸ்கோரை உயர்த்தினார்.
சல்மானின் அரைசதத்தில் பாகிஸ்தான் அணி 300 ரன்களை எட்டியது. பின்னர் சல்மானும் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ரெஹான் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வர 3 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே அட்டாக் செய்ய எண்ணி, பாகிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சாளரான அப்ரார் அஹ்மத்தை பந்துவீச வைத்தது.
பாகிஸ்தான் அணியின் பரிசோதனைக்கு கிடைத்த பலனாக, ஜாக் கிரௌலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்தது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சை இங்கிலாந்து அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now