PAK vs ENG, 7th T20I: பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-3 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்று சமனிலையுடன் இருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
பின் 18 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த பிலிப் சால்ட்டும் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - பென் டக்கெட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மாலன் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 19 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹாரி ப்ரூக்கும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் 78 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 46 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில், கேப்டன் பாபர் ஆசாம் 4 ரன்களிலும், முகமது ரிஸ்வான் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் களமிறங்கிய ஷான் மசூத் ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் அரைசதம் கடந்த கையோடு, 56 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-3 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now