PAK vs NZ, 3rd T20I: மார்க் சாப்மேன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் சைம் அயூப் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் பாபர் அசாமும் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
பின்னர் களமிறங்கிய உஸ்மான் கான் 5 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 22 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் கான் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷதாப் கான் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இர்ஃபான் கான் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இர்ஃபான் கான் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - டிம் ராபின்சன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
இதில் செய்ஃபெர்ட் 21 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, ராபின்சனும் 28 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் - மார்க் சாப்மேன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க் சாப்மேன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாக்ஸ்கிராஃப்ட் தனது விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மார்க் சாப்மேன் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now