
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணகாம தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சல்மான் அலி ஆகா 2 ரன்னிலும், நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுபக்கம் முகமது ரிஸ்வான் 71 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களைறங்கிய சஜித் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும், குர்ராம் ஷஷாத் 7 ரன்களிலும் என நடையைக் கட்டினர்.
இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜொமல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கேல் லூயிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேசி கார்டியும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் பிராத்வைட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.