
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹராரே வில் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் அபித் அலி - அசார் அலியின் பார்ட்னர்ஷிப் பால், முதல் விக்கெட்டை விரைவில் இழந்த பாகிஸ்தான் அணி, 2வது விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாபர் அசாம், ஃபவாத் ஆலம் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, சஜித் கான் 20 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டை சதமடித்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய நௌமன் அலி 97 ரன்னில் ஆட்டமிழக்க, அத்துடன் 510 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்தது. இதில் பாகிஸ்தான் அணியின் அபித் அலி 215 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.