
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 87 ரன்களையும், சௌத் ஷகீல் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரமும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின் 55 ரன்களை எடுத்த நிலையில் ஸோர்ஸி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்தது. இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கைல் வெர்ரைன் மேற்கொண்டு ரன்கள் ஏதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழக்க, 76 ரன்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.