ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக 191 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக வென்று தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில் இந்தியா தங்களுடைய வெற்றி பயணத்தில் அடுத்ததாக நாளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் 4ஆவது போட்டியில் வங்கதேசத்தை மதியம் 2 மணிக்கு சந்திக்கிறது. சாதாரணமாகவே 2016 டி20 உலகக்கோப்பை, 2018 நிதிஹாஸ் கோப்பை போன்ற தொடர்களில் தோல்வியின் பிடியில் சிக்கியும் மீண்டெழுந்து வென்ற இந்தியா இம்முறையும் வங்கதேசத்தை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இந்த உலகக் கோப்பையில் கத்துக் குட்டிகளாக கருதப்படும் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் கடந்த சில நாட்களில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தன. எனவே 2007 உலகக்கோப்பை போன்ற சம்பவத்தை மீண்டும் வங்கதேசத்தை செய்யவிடாமல் இந்தியா இம்முறை கவனத்துடன் மதிப்பு கொடுத்து விளையாடி வெற்றிக்கான முனைப்புடன் களமிறங்க உள்ளது.