தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ளது முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தன. இதையடுத்து, பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் குயின்டன் டி காக் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 39 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டோனி டி ஸோர்ஸியும் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் மேத்யூ பிரீட்ஸ்கி, பீட்டர் ஆகியோர் தலா 16 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 37.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.