டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடிய.
தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதேவேளையில், அரையிறுதிக்கான அரிதினும் அரிதான கொஞ்சநஞ்ச வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இறங்கியது. எனவே இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் களமிறங்கின.
Trending
சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய ஃபகர் ஸமானுக்கு பதிலாக முகமது ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செம ஃபார்மில் இருக்கும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசன் ஆடுகிறார். கேஷவ் மஹராஜுக்கு பதிலாக தப்ரைஸ் ஷம்ஸி ஆடுகிறார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான்(4) மற்றும் பாபர் அசாம்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பாபர் அசாம் 15 பந்தில் 6 ரன் அடித்து அணியின் ஸ்கோர் வேகத்தையும் கெடுத்துவிட்டு சென்றார். ஷான் மசூத்தும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஃபகர் ஸமானுக்கு பதிலாக விளையாடிய முகமது ஹாரிஸ், 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை விரைவில் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் 11 பந்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயத்தை காட்டிவிட்டுத்தான் சென்றார். அதன்பின்னர் இஃப்திகார் அகமது பொறுப்புடன் நிலைத்து நின்று ஆட, நவாஸ் 22 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இஃப்திகார் ஒருமுனையில் பொறுப்புடன் ஆட, மறுமுனையில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஷதாப் கான் 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 2ஆவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஷதாப் கான். ஷோயப் மாலிக் 18 பந்தில் அடித்த அரைசதமே பாகிஸ்தான் வீரர் அடித்த அதிவேக அரைசதம். 20 பந்தில் அரைசதம் அடித்த ஷதாப் கான், 2ஆம் இடம்பிடித்து சாதனை படைத்தார்.
இஃப்திகார் அஹ்மதுவும் அரைசதம் அடித்தார். இஃப்திகார் அகமது 35 பந்தில் 51 ரன்களும், ஷதாப் கான் 22 பந்தில் 52 ரன்களும் விளாச 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக் ரன் ஏதுமின்றியும், ரைலீ ரூஸோவ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஆனால் இந்த தொடரில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்த டெம்பா பவுமா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஃபார்மிற்கு திரும்பினார்.
அவருக்கு பக்கபலமாக ஐடன் மார்க்ரமும் அதிரடி காட்டத்தொடங்கினார். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெம்பா 36 ரன்களிலும், மார்க்ரம் 20 ரன்களிலும் நடையைக் கட்ட, மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு 142 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் கடின இலக்கை நோக்கி துரத்திய தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசென் 15, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18, வெய்ன் பார்னெல் 3 ரன்களிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கும் விக்கெட்டை இழது பெவிலியன் திரும்பினர்.
இதனால் 14 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now