
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதி போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகலில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளுமே தொடரை சுமாராக தொடங்கினாலும் அரை இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தின.
பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தையும் இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இன்றைய மோதலானது 30 வருடங்களுக்குப் முன்னர் இதே மெல்போர்ன் மைதானத்தில் இரு அணிகளும் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டவதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
அப்போது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியிருந்தது. அதேபோன்றதொரு வெற்றியை தற்போது டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பெறுவதில் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தீவிர முனைப்பு காட்டக்கூடும். இந்த தொடரில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இதற்கு காரணம் தொடக்க ஆட்டங்களில் இந்தியா, ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்ததுதான்.