Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan November 12, 2022 • 16:11 PM
Pakistan vs England, Final, T20 World Cup – PAK vs ENG Cricket Match Prediction, Where To Watch, Pro
Pakistan vs England, Final, T20 World Cup – PAK vs ENG Cricket Match Prediction, Where To Watch, Pro (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நாளை மெல்போர்னில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

Trending


டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3ஆவது முறையாகும். இதற்கு முன் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே சமயம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் தான் வென்றது.

அடுத்து 2010இல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகளும் 'சூப்பர் 8' சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றிகளையும், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி என அடுத்தடுத்து விறுவிறுப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. 

அதிலும் அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் கரண், ஆதில் ரஷித் என மூவரும் அடுத்தடுத்து வெற்றிகளுக்கு உத்வேகமாக இருந்துள்ளனர். இதில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அபாரமாக செயல்பட்டு, ஃபார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதே ஃபார்மை அவர் இறுதிப்போட்டியிலும் தொடர்ந்தால் நிச்சயம் கோப்பை இங்கிலாந்துக்கு தான் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

அதேசமயம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா என சந்தேகங்கள் எழுந்த நிலையில், முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து தற்போது இரண்டாவது கோப்பையை வெல்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 

அதிலும் இந்த சீசனில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், இஃப்திகார் அஹ்மத் ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அந்த அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுன் ஷாஹின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா, முகமது வாசிம் ஜூனியர் என அசுர வேகப்பந்துவீச்சாளர்களும் இருப்பதும் அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா என்பது பலத்த கேள்விக்குறியாகி இருக்கிறது. நாளை மெல்போர்னில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) வசதி உண்டு. அதாவது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த நாளில் போட்டி நடத்தப்படும். ஆனால் இரண்டு நாட்களும் மழை காரணமாக ஆட்டம் நடத்த முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.

லீக் சுற்றில் இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் விளையாடி முடித்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் நாக்-அவுட் சுற்று போட்டியில் முடிவு தெரிய இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் விளையாடி முடித்து இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மழை குறுக்கிட்டால் ஓவர் குறைத்தாவது போட்டியை நடத்த முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மழையால் ஓவர் குறைத்து ஆட்டம் தொடங்குவதாக அறிவித்த பிறகு, அந்த நாளில் ஆட்டம் நடக்கவில்லை என்றால் மாற்று நாளில் முழுமையாக 20 ஓவர் கொண்டதாக போட்டி நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் முடியாமல் போனால் மறுநாளில் அந்த போட்டி முந்தைய நாள் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • பாகிஸ்தான் - 18
  • இங்கிலாந்து - 11

உத்தேச லெவன்

பாகிஸ்தான் – முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷாஹீன் அஃப்ரிடி

இங்கிலாந்து - ஜோஸ் பட்லர் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான்/மார்க் வூட், ஆதில் ரஷித்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ்
  • பேட்டர்கள் - அலெக்ஸ் ஹேல்ஸ், பாபர் அசாம், ஷான் மசூத்
  • ஆல் ரவுண்டர்கள் - சதாப் கான், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ்
  • பவுலர்கள் - ஹாரிஸ் ராவுஃப், ஷாஹின் அஃப்ரிடி, ஆதில் ரஷித்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement