
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதலாவது ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2ஆவது ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடமும் பணிந்தது. இதேபோல் நெதர்லாந்து அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வங்கதேசம், இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா? சாவா? போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போய்விடும். இனிவரும் ஆட்டங்கள் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.
அதிலும் அணியின் தொடக்கவீரர்கள் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பியுள்ளது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து அந்த அணியின் ஃபீல்டிங் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டு வருகிறது.