
சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அடிக்கடி களத்திலும் களத்திற்கு வெளியேயும் மோதி வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன.
அந்த வரிசையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 தொடர்களிலுமே பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் திரும்ப நடைபெற்றாலும் பாதுகாப்பு அம்சங்களில் குறைகள் இருப்பதாக கருதும் இந்தியா 2023 ஆசிய கோப்பையில் விளையாட தங்களுடைய அணியை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அதற்கு எங்கள் நாட்டுக்கு நீங்கள் வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
இருப்பினும் ஜெய் ஷா ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளையும் இலங்கை மண்ணில் நடத்தி வெற்றி கண்டது. மறுபுறம் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதால் 2023 உலகக் கோப்பையை புறக்கணித்தால் ஐசிசி’யிடம் கிடைக்க வேண்டிய பணம் தங்களுக்கு கிடைக்காத என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் அணி விளையாடியது.