அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
ஷஹின் ஷா அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி20 உலககோப்பையை இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன் மூலம், 1992 உலககோப்பையில் பாகிஸ்தானிடம் மெல்போர்னில் அடைந்த தோல்விக்கு, இங்கிலாந்து அணி பழித் தீர்த்து கொண்டது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம், “இங்கிலாந்து அணிக்கு என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன். அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியான நபர்கள். அவர்கள் கடுமையாக களத்தில் போராடி நெருக்கடி கொடுத்தார்கள். இந்த தொடரில் நாங்கள் முதல் 2 போட்டியில் தோல்வியை தழுவினோம். ஆனால் அதன் பிறகு அனைத்து போட்டியிலும் வென்று இறுதிப் போட்டி வரை வென்றது மிகவும் சிறப்புமிக்க செயலாக நான் கருதுகிறேன். என் அணி வீரர்களிடம் இறுதிப் போட்டியில் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன்.
Trending
ஆனால் பேட்டிங்கில் நாங்கள் ஒரு 20 ரன்களை குறைத்து அடித்து விட்டோம் என கருதுகிறேன். இருப்பினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். உலகத்திலேயே சிறந்த பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியாக பாகிஸ்தான் இருக்கிறது. ஷாஹீன் ஆஃப்ரிடி பந்துவீசும் போது பாதியில் வெளியேறினார்.
அது, எங்கள் அணிக்கு பெரிய பாதகத்தை கொடுத்தது. ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையே அது தான். ஆனால் போட்டியின் போது வீரர்கள் காயம் அடைவது எல்லாம் சகஜம் தான். ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. எங்கள் சொந்த நாட்டில் விளையாடியது போல் ஒரு உணர்வு தந்தது. எங்கள் ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாபர் ஆசமுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஷஹின் ஷா அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஷஹீன் அஃப்ரிடிக்கு காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது. அவர்கள் 150 முதல் 155 ரன்கள் வரை எடுத்து இருந்தால் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
ஷஹீன் வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை ஷகீன்ஷா வீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதலாக ஒரு விக்கெட் கிடைத்து இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now