
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இத்தொடரில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஷாதா வில்லியம்ஸ் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய காம்பெல் 38 ரன்களுக்கும், ஸ்டெஃபானி டெய்லர் 47 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அசத்தினார். பின் 19 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூஸும் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் மிடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தாப்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சதாஃப் ஷமாஸ் 10 ரன்களுக்கும், சித்ரா அமீன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய முனீபா அலி ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய பிஷ்மா மருஃப் 19 ரன்களுக்கும், கேப்டன் நிதா தார் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, 38 ரன்கள் எடுத்திருந்த முனீபா அலியும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த அலியா ரியாஸ் - ஃபாதிமா சனா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.