
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் ரஷாதா வில்லியம்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் - காம்பெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினார்.
அதன்பின் 68 ரன்களில் ஹீலி மேத்யூஸும், 31 ரன்களில் காம்பெல்லும் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் மகளிர் அணி தரப்பில் ஃபாதிமா சனா 2 விக்கெட்டுகளையும், துபா ஹசன், கேப்டன் நிதா தார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.