
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆயீஷா ஸஃபர் மற்றும் சித்ரா அமீன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். இதில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற ஆயீஷா ஸஃபர் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய முனீபா அலியும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சித்ரா அமீன் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஃபி ஃபிளெட்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - ரஷாதா வில்லியம்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.