
Rishabh Pant injury: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பிய நிலையில் தற்சமயம் தொடரில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் காயத்தை சந்தித்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்படி இன்னிங்ஸின் 68ஆவது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசிய நிலையில் ஓவரின் நான்காவது பந்தை ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார்.