ரிஷப் பந்த் குறித்து விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்னும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இந்தியா 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 240 ரன் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 67.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Trending
இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரிஷப் பந்த் களம் இறங்கினார். அப்போது ஹனுமான் விஹாரியும் களத்தில் இருந்தார்.
ஆனால் ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். 2ஆவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரிஷப் பந்த் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரிஷப்பண்ட் அடித்த ஷாட்டுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் நேர்மறையாக விளையாடுகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் விளையாடுகிறார். அது அவருக்கு கொஞ்சம் வெற்றியை கொடுத்தது. ஆனால் நிச்சயமாக அவருடன் சில உரையாடல்களை செய்ய போகிறோம். அவரது ஷாட் தேர்வு குறித்து விவாதிக்கப் போகிறோம்.
ரிஷப் பந்த் ஒரு ஆக்ரோஷமான, நேர்மறையான வீரராக இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் சில சமயங்களில் அதை செய்வதற்கான நேரம் மற்றும் சூழ்நிலையை தேர்ந்தெடுப்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now