
Pat Cummins Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் நாதன் லையன் மற்றும் பிரெட் லீ ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பிலும்,வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை படைப்பார்.