
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 28ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 174 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 174 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களைச் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் பின் தங்கியது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி கிளென் பிலிப்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 370 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில்196 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.