
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 12 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த பாபர் ஆசாம் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் காம்ரன் குலாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த துணைக்கேப்டன் சல்மான் அலி ஆகவும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் முகமது ரிஸ்வானும் 44 ரன்னில் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.