ஐபிஎல் 2021: இரண்டாம் பாதியில் விலகும் பாட் கம்மின்ஸ்; காரணம் இதுதான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கேகேஆர் அணி வீரர் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. சீசனில் மொத்தம் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும் இத்தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
Trending
இந்நிலையில் நேற்று (மே 29) நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து துவண்டு கிடந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இச்செய்தி அமைந்துள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான பாட் கம்மின்ஸ், ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இருந்து டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளனர். மேலும் மற்ற வீரர்கள் பயோ பபுள் சூழலில் இருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணியானது செப்டம்பர் மாதம் வங்கதேசத்துடன் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் பாட் கம்மின்ஸ் நிச்சயம் விளையாடமாட்டார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பாட் கம்மின்ஸை, அந்த அணி ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now