
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சர்ச்சையான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதன்படி சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போட்டி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் வீசினார். அப்போது அவர் வீசிய யார்க்கர் பந்தை கணிக்கத் தவறிய ரவீந்திர ஜடேஜா பந்தை தடுத்துவிட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது பந்தை பிடித்த புவனேஷ்வர் குமார் அதனை ஸ்டம்பை நோக்கி த்ரோ அடிக்க, அது ஜடேஜாவின் மீது பட்டது.