
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது கேப்டன் ஒல்லி போப்பின் சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 325 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் மிலன் ரத்நாயக்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 9 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 3 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைச் சேர்த்திருந்தது.