
ZIM vs SL, 2nd ODI: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.
இலங்கை அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிராண்டன் டெய்லரும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பென் கரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை கடந்த நிலையில், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.