
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்காவை கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தது. மழையால் 43 ஓவராக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 245/8 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே அசத்தியது.
குறிப்பாக 82/5 என சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் எட்வார்ட்ஸ் அதிரடியாக 78 ரன்களும், ரூஃலப் வேன் டெர் மெர்வ் 29, ஆர்யன் தத் 23 ரன்களும் அடித்து கடைசி 9 ஓவரில் மட்டும் நெதர்லாந்து 109 ரன்கள் குவிப்பதற்கு உதவினர். மறுபுறம் டெத் ஓவரில் ரன்களை வாரி வழங்கிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா, மார்க்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே நெதர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 42.5 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு குவிண்டன் டீ காக், மார்க்ரம், ஹென்றிச் க்ளாஸென் என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43, கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.