
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 117 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் அயபொங்கா காக்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனே லூஸ் 33 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.