
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்படி, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ரன்னிலும், ஹர்திக் தோமர் ரன்கள் ஏதுமின்றியும், ஆயூஷ் மத்ரே 7 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், ஷிவம் தூபே 17 ரன்களிலும் என வரிசையாக சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் மும்பை அணி 61 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் ஜோடி சேர்ந்த சூர்யன்ஷ் ஷெட்ஜ் மற்றும் அதர்வா அன்கொல்கர் இணை பொறுபுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அன்கொல்கர் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சூர்யன்ஷ் ஷெட்ஜ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷர்தூல் தாக்கூர் 43 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இறுதியில் அன்கொல்கர் 66 ரன்களில் விக்கெட்டை இழக்க, மும்பை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.