SA20 League 1st SF: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரிட்டோரிய கேப்பிட்டல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஜோஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் குசால் மெண்டிஸ் 7 ரன்களுக்கும், தியூனிஸ் டி ப்ரூயின் 9 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்டும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ஒருபக்கம் அதிரடி காட்ட, மறுபக்கம் களமிறங்கிய காலின் இங்ராம், ஜிம்மி நீஷம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடி காட்டிய ரைலீ ரூஸொவ் நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக ஈதன் போஷும் ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் அரைசதம் கடந்திருந்த ரூஸோவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அதன்பின் அதே ஓவரின் கடைசி பந்தில் ஈதன் போஷ் 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் அண்டில் பெஹ்லுக்வாயோ 3 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 13 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 21 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விலாஸும் 18 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஈயான் மோர்கன் - டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாட ஸ்கோரும் உயர்ந்தது. ஆனால் இந்த இணையாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மோர்கன் 17 ரன்களிலும், டேவிட் மில்லர் 31 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஈதன் போஷ், ஆன்ரிச் நோர்ட்ஜே, ஜிம்மி நீஷம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக எஸ்ஏ20 லீக்கின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now