
ஐபிஎல் தொடரை போலவே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தொடர் நேற்று முல்தானில் உள்ள மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆனால் டாஸ் போடுவதற்கே நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
தொடக்க விழா என்பதால் பிரமாண்ட முறையில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது பட்டாசுகளை சரியாக கையாளததால் திடீரென மைதானத்தின் மின் விளக்குகள் மீது மோதி தீ பற்றி எறிந்தது. முதலில் சிறிய வெளிச்சம் போன்று இருந்ததை ரசிகர்களும், மைதான ஊழியர்களும் சகஜமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் பின்னர் தீ பரவத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக தீ அணைப்பு வாகனங்கள் மைதானத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கின. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னரே டாஸ் போடப்பட்டது. எனினும் ரசிகர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.