PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி, சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் மார்ட்டின் கப்தில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் அதிரடி காட்ட தொடங்கிய சிறுது நேரத்திலேயே மார்ட்ட்டின் கப்தில் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேசன் ராயும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Trending
அதைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது நவாஸும் 2 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமத் - இஃப்திகார் அஹ்மத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் அஹ்மத் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த இஃப்திகார் அஹ்மத் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த ஓடியன் ஸ்மித் தனது பங்கிற்கு 25 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணியில் முகமது ஹாரிஸ் 18, சைம் அயூப் 0, காட்மோர் 9, பாபர் அசாம் 19 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரோவ்மன் பாவெல் - ஜேம்ஸ் நீஷம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 36 ரன்களைச் சேர்த்த நிலையில் ரோவ்மன் பாவெல் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த ஜிம்மி நீஷமும் 23 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து களமிறங்கிய தசுன் ஷனாகா - வஹாப் ரியாஸ் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் தரப்பில் முகமது ஹஸ்னைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now