
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தன் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் ஸால்மி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய முகமது ஹாரிஸ் 20 ரன்களிலும், ஹசீபுல்லா கான் 6 ரன்களிலும் என என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் பாபர் ஆசாம் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய டாம் கொஹ்லர் கார்ட்மோர் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அமர் ஜமால், மெஹ்ரான் மும்தாஸ், லூக் வூட் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.