
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்த இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மார்ட்டின் கப்தில் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துகொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அகா சல்மான் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷதாப் கான் 23 ரன்களுக்கும், அசாம் கான் 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப், ஹைதர் அலி, இமாத் வாசிம் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில் மார்ட்டின் கப்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.