பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கராச்சி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மசூத் 10 ரன்களுக்கும், டிம் செய்ஃபெர்ட் 26 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சோயப் மாலிக் ஒரு ரன்னிலும், முகமது நவாஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - கீரென் பொல்லார்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 29 ரன்களுக்கும், அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கீரென் பொல்லார்ட் 3 பவுண்டரி, 3 சிச்கர்கள் என 39 ரன்களைச் சேர்த்த நிலையிலு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய இர்ஃபான் கான் தனது பங்கிற்கு 16 ரன்களையும், ஹசன் அலி 6 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் தைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணியில் தொடக்க வீரர்கள் காலின் முன்ரோ 09 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அகா சல்மான் - கேப்டன் ஷதாப் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் ஆகா சல்மான் 33 ரன்களிலும், அசாம் கான் 9 ரன்களிலும் என தங்களது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷதாப் கான் 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஹைதர் அலி - ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் சிறப்பாக விளையாடியதுடன் அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் ஹைதர் அலி 26 ரன்களையும், அஷ்ரஃப் 12 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்து 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now