
9ஆவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயுப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இன்னிங்ஸின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளியதுடன், முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து மிரட்டினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயுப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 48 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து இரண்டு ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சதத்தை நெருங்கிய சைம் அயுப்பும் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 88 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.