
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரை பின்பற்றி கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 8 சீசன்களைக் கடந்தது வெற்றிகரமான 9ஆவது சீசனில் காலடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற 9ஆவது சீசனின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஃபர்ஹானுடன் இணைந்த ரஸ்ஸி வேண்டர் டுசெனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
அதன்பின் 57 ரன்களில் ஃபர்ஹான் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அப்துல்லா ஷஃபிக், டேவிட் வைஸ், கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 4 பவுண்டர், 3 சிக்சர்கள் என 71 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது.