
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சைம் அயூப் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸும் 13 ரன்களுக்கும், ஹசீபுல்லா கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்கள் எடுத்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், ஸஹித் மஹ்மூத், அராஃபத் மின்ஹாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.