
பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக எஞ்சிய 8 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்களும் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றதன் காரணமாக, இத்தொடரின் எஞ்சிய போட்டிக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நடத்துவதற்கான அனுமதியை மறுத்ததாக கூறப்பட்டது. இதனால் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 26ஆம் தேதி நடைபெறும் என்றும், இருப்பினும் எஞ்சிய போட்டிகளுக்கான மைதானம் மற்றும் நேரம் குறித்த அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.