
துலீப் கோப்பை 2023 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணியும், மேற்கு மண்டல அணியும் மோதி வருகின்றன. பெங்களூரில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தெற்கு மண்டல அணியில் ஓபனர் மயங்க் அகர்வால் 28 பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து 3,4 ஆகிய இடங்களில் களமிறங்கிய திலக் வர்மா 40, கேப்டன் ஹனுமா விஹாரி 63 ஆகியோரும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். பந்து வேகத்திற்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், சுழலுக்கும் நல்லமுறையில் ஒத்துழைப்பு கொடுத்தது.
இதனால், மற்ற தெற்கு மண்டல அணி பேட்டர்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை. சச்சின் பேபி 7, ஃபொய் 9 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் 22 ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 213/10 ரன்களை மட்டும்தான் எடுத்தது.