
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் கேப்டன் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத பிரப்ஷிம்ரன் சிங் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 20 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 137 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அன்மோல்ப்ரீத் சிங் 46 ரன்களிலும், ரமந்தீப் சிங் 80 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நெஹல் வதேரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.