
ஷார்ஜாவில் கடந்த வாரம் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19ஆவது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2ஆவது ரன் ஓடினார்.
பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன்கட் அவுட் செய்யும் முன் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும். ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர் கடைப்பிடிப்பதில்லை.
டிம் சவுதி வீசிய 20 ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார். அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.