
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இள வயதில் 2 சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இணைந்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 27ஆவது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் சேர்த்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் மற்றும் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே - யங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் கான்வே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒரு பக்கம் விக்கெட்டை காத்து நிற்க, எதிர்முனையில் வந்த வீரர்கள் சிக்சர்கள் அடிக்க முற்பட்டு அடுத்த விக்கெட்டை இழந்தனர்.