
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் அரையிறுதிச்சுற்றுகு நியூசிலாந்து அணி முன்னேற தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அந்த சூழ்நிலையில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில்டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு துவக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 51, மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்கள்.மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து 172 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.